விளாத்திகுளம் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் வெள்ளை மயில்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் மானாவாரி விவசாயம் மட்டுமே அதிக அளவில் நடைபெறுவது வழக்கம், தற்போது விவசாயம் பணிகள் முடிந்த நிலையில்,காடுகளில் உள்ள அனைத்து செடி,கொடிகள் வெட்டப்பட்டு அனைத்து காடுகளும் வெட்டை வெளியாக காணப்படுகிறது, இதனால் முயல்,மான் நரி,பன்றிகள்,மயில்கள், கௌதாரி,காடை, எறும்புதின்னி,மரநாய் உள்ளிட்ட வன உயிரினங்கள் உணவு தேடி கிராமங்களுக்குள் மற்றும் சாலை ஓரங்களில் வருவதால் வாகனங்களில் அடிபட்டும் அதிக அளவில் வேட்டையாட பட்டும் வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஒரு வார காலமாக விளாத்திகுளம் பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் இந்திய தேசிய பறவையான மயில்கள் கூட்டம் கூட்டமாக சாலை ஓரங்களில் உணவு தேடி வருகின்றன, இந்நிலையில் விளாத்திகுளம் - பெருநாழி விளக்கு அருகே அரிதாக காணப்படும் வெள்ளை மயில் ஒன்று மயில்கள் கூட்டங்களுக்கிடையே உணவு தேடி வந்தது இதை அப்பகுதியினர் மிகவும் ஆர்வத்துடன் கண்ட ரசித்தனர், குறிப்பாக விளாத்திகுளம் பகுதிகளான இடைச்சியூரணி,N. வேடப்பட்டி, வீரகாஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வெள்ளை மயில்கள் காணப்படுகிறது.பொதுவாக இந்திய நீளமையில், பச்சைமயில், கோர்க்கை மயிலென மூன்று பிரிவுகளாக மயில்கள் பிரிக்கப்படுகின்றன.ஆனால் அரிதாக காணப்படும் வெள்ளை மயில்கள் ஒரு சில சத்துக்குறைபாடு காரணமாக நிறம் மாறி காணப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமாரிடம் செய்தியாளர்கள் விளாத்திகுளம் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்கப்படுமா என்று கேள்வி கேட்டதற்கு, மயில்கள் சரணாலயம் அமைத்தால் மயில்கள் பறந்து விடும் என்றும் இங்கு சரணாலயம் அமைக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
விளாத்திகுளம் வைப்பாற்றப்படுகையான கீழ்நாட்டுகுறிச்சியில் இருந்து, தாப்பாத்தி அயன்வடமலாபுரம், அச்சங்குளம், விளாத்திகுளம் மந்திகுளம்,புளியங்குளம்,பூசனூர், வைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மான்கள்,மயில்கள், முயல்கள் ஆகிய வன உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அரசங்குளம் - புளியங்குளம் காட்டுப்பகுதியில் விலை உயர்ந்த துப்பாக்கிகளால்,மான்கள்,கௌதாரிகள்,முயல்கள் வேட்டையாடப்பட்டதாக மூன்று பேர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம் பகுதியில் உள்ள வனச்சர அலுவலர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பது இங்கு சந்தேகத்து இடமாக இருக்கிறது, எனவே வனத்துறையினர் அரிதாக காணப்படும் வெள்ளை மயில்கள் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.