தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு(NH-38) எப்போது விடிவுகாலம்? : எட்டையபுரம் அருகே அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துக்கள்..!
தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியின் பராமரிப்பின் கீழ் இருந்து வரும் இந்த தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் சேதமடைந்தது, குண்டும் - குழியுமாக போக்குவரத்திற்கு முற்றிலும் லாயக்கற்ற நிலையில் தொடர்ந்து இருந்து வருவதாகவும், இதன் காரணமாகவே இந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான வாகன விபத்துக்களில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்ததையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்ததோடு சாலையை நல்ல முறையில் சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பொருப்படுத்தாமல் சுங்கச்சாவடியின் சார்பில் எந்தவொரு சீரமைப்பு பணியிலும் நடைபெறாததால் தற்போது வரை இந்த மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை(NH38) கிராம சாலையை விட குண்டும் குழியுமாக சாலை மிகவும் சிதிலமடைந்த நிலையில் மோசமாகவே காணப்பட்டு வருகிறது. இது தவிர கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், 4 மாதங்களுக்குள் இந்த தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில், ரூ.207.72 கோடி செலவில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) 128.065 கி.மீ தூரத்திற்கு கால இடைவெளியில் புதுப்பிப்பதற்கான ஏலம் விடப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதீத அலட்சியமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இச்சாலையில் நாள்தோறும் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு இந்த தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை(NH-38) சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது இச்சாலையை கடந்து செல்லும் அனைவரது கோரிக்கையாக உள்ளது....