தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எப்போதும் வென்றான்
நீர்த்தேக்கமானது கடந்த 1970-ஆம் ஆண்டு
கட்டப்பட்டது. இந்த அணையானது சோழபுரம் கிராமத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நீர்த்தேக்கத்தை நம்பியே எப்போதும் என்றான், காட்டுநாயக்கன்பட்டி, மிளகுநத்தம், ஆதனூர், அய்யர்பட்டி, கன்னக்கட்டை, தளவாய்புரம், குமரட்டையாபுரம், சோழபுரம் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களுக்கு எப்போதும்
என்றான் நீர்த்தேக்க அணையில் இருந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை
குடிநீர் தேவை, விவசாயம், கால்நடை வளர்ப்பு
உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை நீர்த்தேவைக்கும், வாழ்வாதாரத்திற்கு முதன்மை ஆதாரமாக இருந்து வந்தது. இந்நிலையில்
கடந்த சில ஆண்டுகளாக எப்போது வென்றான் நீர்த்தேக்கம் முறையாக தூர்வாராதது மற்றும் பராமரிக்கப்படாததன் காரணமாக, அணை முழுவதும்
கரிசல் மண் திட்டுகளுடன் நீரின்றி காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் தண்ணீர்
பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதே நிதர்சனம்.....
அதுமட்டுமின்றி, கடந்தாண்டு பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த அணையை தூர் வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் முறையாக தூர் வாராமல் அணையின் கரைகளை மட்டும் பெயருக்கு சரிசெய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போதும் கூட இப்பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தும், எப்போதும் வென்றான் நீர்த்தேக்க அணையை சரிவர தூர்வாராததால், அனைத்து நீரும் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலைதான் ஏற்பட்டது, இதனால் இந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் குடிநீர் தேவை என மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இப்பகுதிகளுக்கு உரிய குடிநீர் வழங்க மத்திய &மாநில அரசின் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும், எவ்வித பயனும் இல்லை. அதேபோன்று சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக 5 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், அந்தக் குடிநீரை பிடிப்பதற்கு மக்கள் கால்கடுக்க வெயிலில் தலையில் துணியை முக்காடு போட்டுக்கொண்டு மணிக்கணக்காக நின்று காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாகப் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் அன்றாட கூலி வேலை மட்டுமே செய்து வருகின்றனர். அதிலும் சீவலப்பேரி கூட்டுக்குடிநீரை பிடிப்பதற்கு வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்து வருகிறது. அல்லது வாகனங்களில் விற்பனைக்கு வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 முதல் ரூ.25 வரை செலவு செய்து விலைக்கு வாங்கி பருகும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வறுமையில் வாழும் தங்களால் கூலி வேலைக்கு சென்று தினமும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்க முடியாத நிலை உள்ளது என்ற பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக நீர்த்தேக்க தொட்டியில் வரும் குடிநீரானது மிகவும் கடுத்தும், சுவையற்ற தன்மையில் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்தை முறையாக நன்கு ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்றும், அணையின் மதகுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்...கடந்த 30 ஆண்டுகளாக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி உள்ளார்களே தவிர மக்களின் வாழ்வாதார காட்சிகள் மாறவில்லை என்று விளாத்திகுளம் தொகுதி மக்கள் கூறுகின்றனர்.