விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் பறிபோன ஆட்டின் உயிர் : அபாயமான கிணற்றுக்கு முறையான பாதுகாப்பு தடுப்புச்சுவர் எப்போது? 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கிணறு ஒன்று முறையான பாதுகாப்பின்றியும், பராமரிப்பின்றியும் இருந்து வருகிறது. இந்த கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புச் சுவர் கட்டாமல் கோவில் நிர்வாகம் சார்பில் பெயரளவிற்கு மட்டுமே கம்பி வேலிகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பற்ற கிணற்றை சுற்றிலும் முறையான பாதுகாப்புச் சுவர் கட்டி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததன் காரணமாக பலமுறை இதில் கால்நடைகள் தவறி விழுந்த நிலையிலும் கூட கோவில் நிர்வாகத்தின் அதீத அலட்சியத்தினால், இன்றும் விளாத்திகுளம் மதுரை ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கோபால்(42) என்பவருக்குச் சொந்தமான ஆடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதில் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் கிணற்றில் விழுந்த ஆட்டினை பத்திரமாக மீட்க முயற்சித்தும் ஆடு பரிதாபமாக உயிரிழந்தது ஆட்டின் உரிமையாளருக்கு மட்டுமின்றி அங்கிருந்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், "கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் இல்லாததால் ரூ.4000 மதிப்புள்ள தனது ஆடு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது... இதுக்கு யார் நஷ்ட ஈடு கொடுப்பார்கள்?" என்று ஆட்டின் உரிமையாளர் கோபால் தனது சோகத்தை வெளிப்படுத்தினார்....


இந்த அபாயகரமான கிணற்றில் பல முறை இதுபோன்ற விபத்து சம்பவங்கள் அறங்கேறியும்... கோவில் செயல் அலுவலர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. மதுரை மெயின் ரோட்டில் இந்த கிணறு அமைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தாக இந்த கிணறு முறையான பாதுகாப்பு தடுப்புச்சுவர் இன்றி காணப்படுகிறது. ஆகையால், இனியும் தாமதிக்காமல் உடனடியாக இந்த கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்ட கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.