தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கமலாபுரம் ஊராட்சி சுப்பிரமணியபுரம் 2-வது மற்றும் 3-வது வார்டு பகுதிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்பகுதி மக்களை ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் உட்பட பொதுமக்கள் அனைவரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.  சுப்பிரமணியபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் அலைக்கழிப்பது ஒரு புறம் இருக்க.... வார்டுகள் முழுவதிலும் கருவேலி மரங்கள் சூழ்ந்தும், புதர்கள் மண்டியும், குடியிருப்பு பகுதிகளுக்குள் செப்டிக் டேங்க் கழிவு நீர், வீட்டுக்கழிவு நீர் தேங்கியும் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது பற்றி பலமுறை வார்டு கவுன்சிலர்கள் கமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரியிடம் முறையிட்டும் தற்போது வரை அப்பகுதியை தூய்மைப்படுத்தவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் சிறுதுளி நடவடிக்கை கூட எடுக்காமல் சுப்பிரமணியபுரம் பகுதி மக்களை அலட்சியம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, கமலாபுரம் பெண் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரியின் கணவர் பாலமுருகன் ஊராட்சி நிர்வாகத்தில் அதிகமாக தலையிடுவது ஒரு முக்கிய புகாராக கூறப்படுகிறது... இதனால், ஊராட்சியில் உள்ள குறைகள், கோரிக்கையை கூறுவதற்கு தலைவருக்கு போன் செய்தால் அவரது கணவரே போனை எடுத்து..."நாங்க எதுக்கு வரனும்...அதெல்லாம் வரமுடியாது, நீங்க எங்களுக்கா ஓட்டுப்போட்டீங்க..." என்று கடுமையாக பேசி போனை வைத்து விடுவாராம். இதை விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்தவொரு பயனும் இல்லை... பெண் ஊராட்சி தலைவரின் கணவரின் அட்டூழியத்தையும், தலையீட்டையும் கட்டுபடுத்த அதிகாரிகளுமே திணறுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இதனை கருத்திற்கொண்டு உடனடியாக அப்பகுதி பிரச்சனைகளை சரிசெய்யாவிடில் சுப்பிரமணியபுரம் பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகையால், நோய் தொற்று பெருகும் அளவிற்கு சுகாதாரமற்ற சூழ்நிலையில் மிகவும் ஆபத்தான வகையில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களின் நலனை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி, கால்வாய் வசதி ஏற்படுத்தி தர விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.