விளாத்திகுளம் அருகே 2023-ம் ஆண்டு பெரு வெள்ளத்தில் தத்தளித்த கிராம மக்கள் : 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்வென்றான் நீர்த்தேக் அணையில் இருந்து பல மைல் தூரம் கடந்து வரும் கல்லாறு வடக்குகல்மேடு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சண்முககுளம் தடுப்பணையில் நிரம்பி தெற்கு கல்மேடு மற்றும் வடக்கு கல்மேடுக்கு இடையே கடந்து கடலில் கலக்கிறது.
மழைக்காலங்களில் இந்த அணையை கடந்து செல்ல முடியாமல் வடக்குகல்மேடு,தெற்குகல்மேடு,வேப்பலோடை,பாண்டியாபுரம், துரைச்சாமிபுரம், சுந்தரேஸ்வரபுரம், சக்கம்மாள்புரம், வெங்கடேஸ்வராபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வந்தனர், இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையின் காரணமாக தெற்கு கல்மேடு மற்றும் வடக்கு கல்மேடு கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இரண்டு நாட்களாக மழை வெள்ளத்தால் சூழ்ந்து உணவின்றி தவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு கிராம பொதுமக்களும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன், அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் மேம்பாலம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் சுமார் 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 103 மீட்டர் தூரம்,7 1/2 மீட்டர் அகலம்,5 மீட்டர் உயரத்தில் தெற்கு கல்மேடு மற்றும் வடக்கு கல்வேடு இடையே கல்லாற்றின் மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மேம்பாலம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கொடிஅசைத்து கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.