விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுப்புலாபுரம், மணியக்காரன்பட்டி கிராமங்களில் தலித் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட சுடுகாடு நிலம் மற்றும் சாலையை அங்கு வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் போன்ற அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், மேற்கண்ட 2 கிராமங்களில் பொது மக்களின் அடிப்படை வசதிகளான மகளிர் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, மயான தகன மேடை, வாறுகால் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செய்து கொடுக்காததை கண்டித்தும் இன்று அக்கிராம மக்கள் தமிழ் புலிகள் கட்சியின் புதூர் ஒன்றியச் செயலாளர் வெள்ளைவேந்தன் தலைமையில் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன், கட்சி நிர்வாகிகள் வீர பெருமாள், மதிவேந்தன், மூக்காண்டி, வேல்முருகன், கனகலட்சுமி உட்பட கிராம மக்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...