விளாத்திகுளம் அருகே வாதலக்கரை கிராமத்தில் சேறும், சகதியுமாக காணப்படும் சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதனப் போராட்டம் : உடனடியாக சாலை அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி ஏற்படுத்தி தராததால் அப்பகுதியைச் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். அதிலும், தற்போது கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அங்கு குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை முற்றிலும் சேறும் சகதியுமாக நிரம்பி நடப்பதற்கே  லாயக்கற்ற நிலையில் மிக மோசமான சாலையாக காட்சியளித்து வருகிறது. அக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவரும் சேறும் சகதியுமாகக் காணப்படும் இச்சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி இங்கு விழுந்து விபத்துக்குள்ளாகி வருவதாகவும் கூறுகின்றனர். இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்   முறையிட்டும் இதனை சரி செய்ய யாரும் முன்வராத காரணத்தினால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று சேறும் சகதியமாக காணப்பட்ட சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் சேறும் சகதியுமாக காணப்பட்ட இந்த சாலையில் சேற்றில் இறங்கி நாற்றுக்களை நட்டு தங்களது பகுதிக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மேலும், முறையான சாலை வசதி இல்லாததால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி இப்பகுதியில் தேங்கி கிடக்கும் சகதியால் இங்குள்ள பல குழந்தைகள் நோய் தோற்றுக்குள்ளாகி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். ஆகையால், இக்கிராம மக்களுக்கு உடனடி தீர்வாக சேறும், சகதியமாக காணப்படும் இங்கு தற்காலிகமாக பாதை வசதி ஏற்படுத்தி தருவதோடு விரைவில் இங்கு தரமான சிமெண்ட் அல்லது தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.