வெள்ள நீரில் தனித் தீவாக மாறிய எம்.குமாரசக்கணபுரம் கிராம மக்கள் : வீடுகள், ரேசன் கடைகளுக்குள் புகுந்த மழை நீர் : அரசு அதிகாரிகள் முகாமிட்டு உடனடி நிவாரணம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம். குமாரசக்கணபுரம் கிராமத்தின் பெரிய கண்மாய் முழுவதுமாக நிரம்பியதில் கரையைத் தாண்டி ஊருக்குள் வெள்ளம் வந்துள்ளது. இதனால் கிராமத்தின் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து வீட்டில் இருந்த மின்சார சாதனங்களில் இருந்து உணவுப் பொருட்கள் வரை அனைத்தும் வெள்ளத்தால் நாசமாகியுள்ளது. மேலும் இங்குள்ள ரேசன் கடைகளுக்குள் புகுந்த வெள்ள நீர் அங்கிருந்த ரேஷன் பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி காணப்படுகிறது. இதையடுத்து மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் யூனியன் சேர்மன் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு சமுதாய கூட்டத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்கள் தங்குவதற்கு பாய் தலையணை மற்றும் உணவு ஏற்பாடு செய்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெள்ள அபாயம் இருக்கும் பகுதியில் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.எம்.குமாரசக்கணபுரத்தைப் போலவே விளாத்திகுளம் மற்றும் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பல வார்டுகளிலும், பல ஊராட்சி பகுதிகளிலும் வெள்ள நீர் வடிந்து செல்லாத காரணத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாக உள்ளது.