விளாத்திகுளம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா வைத்து அசத்திய கிராம மக்கள் : கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராமத்தினர்...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துவரந்தை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 22 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த தில்லையம்மாள் என்பவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் இன்று அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லையம்மாளுக்கு அப்பள்ளியில் வைத்து மாபெரும் பணி நிறைவு பாராட்டு விழா வைத்து அசத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கிராம மக்கள் தங்களது கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பெண் தலைமை ஆசிரியருக்கு மோதிரம் அணிவித்து, ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துள்ளனர். மேலும் இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தில்லையம்மாளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி அவரது நற்குணங்கள் பற்றி பேசி பாராட்டி மகிழ்ந்து தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். கிராம மக்களே திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்த இந்த பணி நிறைவு பாராட்டு விழாவில், பள்ளி மாணவ - மாணவிகள், முன்னாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சக ஆசிரியர்களின் வாழ்த்துப்பாடல்கள், கவிதைகள் என அனைத்தும் பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தில்லையம்மாளை ஆனந்தக் கண்ணீருடனே மேடையில் அமர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.. இறுதியாக இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்ட அனைவரும் அறுசுவை அசைவ விருந்தில் பங்கேற்று உணவருந்திச் சென்றனர்.