17 வயது சிறுமி கொலை வழக்கில் கிராம மக்கள் குற்றவாளிகளை பிடிக்க தற்போது முழு ஒத்துழைப்பு: வீடு வீடாக சென்று காவல்துறையினர் விசாரணை!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை மாலை (17)  வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்பினர், தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை குறுக்குச்சாலை விளக்கு, வேடநத்தம்,குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நாங்கள் சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான 10 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கடந்த நான்கு நாட்களாக தேடி வந்தனர்.




இதுவரை சிறுமியின் உடன் படித்த மாணவர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினருக்கு பின்னடைவு மட்டுமே தொடர்ந்து நீடித்து வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரங்கள்  குற்றவாளிகளை பிடிக்க வேடநத்தம் கிராம மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தராத நிலையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.




இந்நிலையில் இன்று மதுரை தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி  17 வயது சிறுமி கொலை வழக்கு தொடர்பாக குளத்தூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து ஏ.எஸ்.பி அஸ்வினி தலைமையில் இரண்டு டி.எஸ்.பிகள் கொண்ட குழுவினர் வேடநத்தம் கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தற்போது கிராம மக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் திங்கள்கிழமை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.