45 ஆண்டுகளாக வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்து ஏமாற்றிய விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம்:சட்டவிரோத மின் பயன்பாட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தற்போது இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்ல் உள்ள 14 கடைகள், கடந்த 1979-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஒவ்வொரு கடைக்கும் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சி நிர்வாகம் மாதம் மாதம் வாடகை மற்றும் தொழில்வரி வசூல் செய்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த காய்கறி மார்க்கெட்டில் உள்ள 14 கடைகளும் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்டது கிடையாது! இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்று தற்போது கூறி வருகின்றனர்.
ஒரு தனி நபர் குடும்பத்திற்கும் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் இடையே கடந்த 1979-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த வழக்கு சம்பந்தமாக யாரும் நேரில் ஆஜராக கூடாது என்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு அரசியல்வாதி தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு அரசியல் பிரமுகர் ஒரு தனி ஒரு குடும்பத்திற்காக அரசு இடத்தை தாரைவார்க்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,அந்த அரசியல்வாதி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் நிதியாக அந்த தனி நபர் குடும்பத்தினரிடம் இருந்து பல கோடி ரூபாய் வாங்கி அந்த தனி நபருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது காய்கறி மார்க்கெட்டில் உள்ள 14 கடைகளில் தலா ஒவ்வொரு கடைகளிலும் 5 பேர் வீதம் தற்போது 100 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். காலம் காலமாக இந்த காய்கறி மார்க்கட்டையே நம்பி உள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் என 100 பேர் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த இடப்பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது, வழக்கு நடைபெற்று அதற்கு உண்டான தீர்ப்பு வந்தாலும், கடந்த 45 ஆண்டுகளாக வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்த பேரூராட்சி நிர்வாகம், அந்தப்பணத்தை திருப்பித் தருமா? அல்லது வியாபாரிகளுக்கு பொதுப்பணித்துறையினர் ஒத்துழைப்பு தந்து தொடர்ந்து இந்த 14 காய்கறி கடை நடத்த அனுமதி தருமா? அந்தத் தனிநபர் குடும்பத்திற்கு அரசு இடத்தை தாரை வார்குமா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் தற்போது முன் வைத்துள்ளனர்.
அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே மிகப் பிரமாண்டமாக ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது, அந்தக் கட்டிட வளாகத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.ஏழை எளிய சாமானிய மக்கள் மின்சார கட்டணத்தை குறித்த தேதிக்குள் கட்டாமல் இருந்தால், அவர்களின் மின் விநியோகத்தை நிறுத்தி குரலை ஒசத்தி பேசி அதிரடி காட்டும் மின்சாரத் துறையினர்,பணம் கொளுத்த தொழிலதிபர்களிடம் மட்டும் ஏன் மின்சாரத்துறை அதிகாரிகள் காட்டவில்லை என்று குற்றச்சாற்றும் எழுகின்றன.