பெண் கவுன்சிலரின் அட்டூழியத்தை கண்டு கொள்ளாத விளாத்திகுளம் காவல்துறை : பேரூராட்சி அலுவலகம் முன்பே அரங்கேறும் அவலம்....!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியின் 2-வது வார்டு பெண் கவுன்சிலரான குறிஞ்சி என்பவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே "குறிஞ்சி அக்கா கடை" -எனும் பெயரில் நைட்டிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் விளம்பர பேனர்களை சாலையை ஆக்கிரமித்து ரோட்டில் வைத்திருப்பதோடு மட்டுமின்றி, பல சிறிய தொட்டிகளில் செடிகளையும் வைத்து அவ்வழியாக செல்லும் வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறு செய்து வருகிறார். வழக்கமாகவே, பேருந்து நிலையத்திலிருந்து - சாலையம் தெருவிற்கு செல்லும் இச்சாலையானது மிகவும் குறுகலான சாலையாக இருப்பதாலும், NO PARKING ZONE -ல் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டு இருப்பதாலும் அந்த சாலை வழியாக பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும், பொது நூலகத்திற்கு செல்வதற்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு இடையில் தான் சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக இப்பகுதிக்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும் இச்சாலையில், விளாத்திகுளம் பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் குறிஞ்சி இதுபோன்று தனது கடை விளம்பரத்திற்கு பேனர்கள் மற்றும் செடிகளை வைத்துக்கொண்டு பெரிதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது... விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பே நடக்கும் இந்த அட்டூழியத்தை தற்போது வரை விளாத்திகுளம் காவல்துறையினர் துளி கூட கண்டுகொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை.. தினமும் மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாதவர்களை தேடி தேடி அபராதம் விதிக்கும் காவல்துறை அதிகாரிகள்.... இதுபோன்று மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் வார்டு கவுன்சிலர் என்ற அதிகாரத்தில் "யார் வந்து என்னை கேட்பார்கள்..?" என்பதைப் போல் சாலையிலேயே ஏராளமான தொட்டியில் செடிகள் மற்றும் விளம்பரம் பேனர் வைத்திருப்பதை மட்டும் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்களே! என்ற பேச்சு பரவலாக பேசப்படுகிறது.
விளாத்திகுளம் 2-வது வார்டு பெண் வார்டு கவுன்சிலர் குறிஞ்சி என்பவர் இதுபோன்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையை தனக்கு சொந்தமான இடம் என நினைத்துக்கொண்டு செடிகள் வளர்ப்பதும், தன்னுடைய கடை விளம்பர பேனர்களை வைப்பதுமாக பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவது விளாத்திகுளம் பகுதி மக்களிடையே தற்போது ஒரு முக்கியமான பேசும் பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் உடனடியாக விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் மற்றும் காவல் ஆய்வாளர் சக்திவேல் பொதுக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய இந்த சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள செடிகள் மற்றும் கடை விளம்பர பேனர்களை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதோடு, பொது சாலையை ஆக்கிரமித்து விளம்பர பேனர்கள் வைத்ததற்காக பெண் கவுன்சிலர் குறிஞ்சி மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
(விளாத்திகுளம் காவல்துறை சார்பில் கவுன்சிலரின் ஆக்கிரமிப்பு செடிகள் மற்றும் பேனர்களை அகற்றி அப்பகுதியில் "NO PARKING ZONE" -ல் இருசக்கர வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.)