விளாத்திகுளம்-மேல்மாந்தை கண்மாயின் கால்வாய் மற்றும் மதகுகள் சேதம் அடைந்ததால் 4000 ஏக்கர் விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான கண்மாயிகள் முற்றிலும் நிரம்பியதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோன்று மேல்மாந்தையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாயின் மதகுகள் மற்றும் கால்வாய்கள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டதன் காரணமாக கண்மாய் நீர் செல்லவதற்கு வழியின்றி அருகே உள்ள சுமார் 4000 ஏக்கர் விலை நிலங்களுக்குள் கண்மாய் நீர் சென்று தேங்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம், மிளகாய், உளுந்து, பாசி, கம்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, கண்மாய் தண்ணீர் வெளியேறுவதற்கு கிட்டத்தட்ட 100 அடி வரை இருந்த கால்வாய் தற்போது 20 அடியாக சுருங்கி இருப்பதாலும் அதுவும் முறையாக தூர்வாரப்படாததாலும்தான் வெள்ள நீர் விளைநிலங்களுக்குள் செல்கிறது என்று கூறுகின்றனர். மேலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த பெரிய கண்மாயின் மதகுகளும் எந்தவித பராமரிப்பும் இன்றி மிகவும் சேதம் அடைந்த புதர் மண்டி காணப்படுகிறது. ஆகையால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேல்மாந்தை கண்மாயின் மதகுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்றும், கண்மாய் நீர் விளை நிலங்களுக்குள் செல்லாதவாறு கால்வாயை விரிவுபடுத்தி தூர்வாரித்தர வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்....