விளாத்திகுளம் அருகே புதியதாக கட்டிய வீட்டிற்கு தீர்வை ரசீது போட ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்கும் ஊராட்சி செயலாளர் வீடியோ - சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல ஈரால் ஊராட்சியில் ஊராட்சி செயலராக இருந்தவர் நாகராஜ். ஈராச்சி ஊராட்சி செயலராகவும் பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் மீனாட்சிபுரம் ஊராட்சி செயலாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேலஈரால் பகுதியில் புதிதாக வீடு கட்டிய ஒருவருக்கு அதற்கான அங்கீகாரம் மற்றும் வீட்டு தீர்வை போடுவதற்கு நாகராஜ் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பணம் தனக்கு மட்டுமல்ல வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கும் வழங்க வேண்டி இருப்பதாக நாகராஜ் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஈராச்சி, மேலஈரால் என இரண்டு ஊராட்சிகளின் பொறுப்புக்களை கவனித்து வந்த நாகராஜ் தற்போது மீனாட்சிபுரம் ஊராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.