தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் முன்னிலையில் வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 8.00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் யாகசாலை தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் காலை 10 மணியளவில் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி அம்பாள், சண்முகர், விநாயகர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து மூலவர் சுவாமி அம்பாள் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீரால் கும்ப அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருநீறு மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் 5 வகையான சாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது.