"AASHIRVAAD கோதுமை மாவில் குவிந்து காணப்பட்ட புழுக்கள்" - விளாத்திகுளத்தில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் அதிர்ச்சி வீடியோ வைரல்..!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் இன்று விளாத்திகுளம் பஜார் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 1Kg எடையுள்ள "AASHIRVAAD SELECT" என்ற தனியார் நிறுவனத்தின் கோதுமை மாவு பாக்கெட் ஒன்றை ரூ.75க்கு வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின் அவரது வீட்டில் சமையல் செய்வதற்காக கணேஷ் வாங்கி வந்த கோதுமை மாவு பாக்கெட்டை அவரது மனைவி பிரித்துப் பார்த்தபோது, அதிலிருந்த கோதுமை மாவு கெட்டுப் போன நிலையில் ஏராளமான புழுக்கள் குவிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கோதுமை மாவு காலாவதி ஆகிவிட்டதா? என சந்தேகமடைந்த வாடிக்கையாளர் கணேஷ், மாவு பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் தேதியை (Expiry date) சரிபார்த்தபோது, அதில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி என்று இருப்பதைக் கண்டு உடனடியாக AASHIRVAD நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் செய்துள்ளார். 



பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கணேஷ், AASHIRVAAD நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியான ஐயப்பன் என்பவரிடம் பேசிய செல்போன் உரையாடலில், இந்த புகார் பற்றி தெரிவித்ததற்கு... வருகின்ற புதன்கிழமை தான் விளாத்திகுளம் வந்து கெட்டுப்போன நிலையில் இருக்கும் இந்த 1 கிலோ கோதுமை மாவு பாக்கெட்டைப் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக வேறு 1 கிலோ கோதுமை மாவு பாக்கெட்டை வழங்குவதாக தெரிவித்தோடு அதனை பெங்களூருக்கு சோதனைக்கு அனுப்பினால் தான் எதனால் இப்படி ஆனது என்று தெரியும் என்று கூறியுள்ளார். அதற்கு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கணேஷ், தான் கோதுமை மாவு பாக்கெட் வாங்கிய கடையில் இதுபோன்று ஏராளமான பாக்கெட்டுகள் இருக்கின்றன, அவையனைத்தையும் பொதுமக்களுக்கு விற்காமல் இருக்க உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கோரிக்கை வைத்ததற்கு.... "உடனடியாக அது முடியாது சார்.." என்று அலட்சிய பதிலைக் கூறியுள்ளார் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஐயப்பன் கூறியதால் அதிருப்தி அடைந்த கணேஷ் இதுபோன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை தரமான முறையில் தயார் செய்ய கோரிக்கை வைத்ததோடு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது போன்ற விஷயங்களில் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். இந்த காணொளி இப்பகுதியில் வேகமாக பரவி வாடிக்கையாளர்களின் மத்தயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.