விளாத்திகுளம் அருகே  40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய யூனியன் சேர்மன்: புதிய BUS STOP வரப்போகுது என மக்கள் மகிழ்ச்சி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் சரிவர இல்லாததால் மழை, வெயில் காலங்களில் மணிக்கணக்கில் சாலையிலேயே பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையால் அக்கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், அங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் ஊராட்சி ஒன்றிய பொது நிதி 2024-2025-லிருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்திடப்பட்டு இன்று அக்கிராமத்தில் பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், புதிய பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்து ஒப்பந்ததாரரிடம் விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஒப்பந்ததாரர் கணேசன், கோடங்கிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி, கவுன்சிலர் தர்மராஜ் , கிளைச் செயலாளர் புவனேஸ்வரன் சுப்புராம், வார்டு உறுப்பினர் வீரலட்சுமி அமிர்தராஜ் உட்பட கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.