விளாத்திகுளம் அருகே தாய், மகள் கொலை சம்பவத்தில் இருவர் கைது!
*கடந்த இரண்டு நாட்களாக காட்டுப்பகுதியில் போலீசாருக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது*
*சகோதரி வீட்டிற்கு சாப்பிட வந்த போது கோழி அமுக்குவது போல கைது செய்த போலீசார் - தனி இடத்தில் வைத்து விசாரணை*
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தில் கடந்த 3 ஆம் தேதி வீட்டுக்குள் தாய் சீதா லட்சுமி (75), மகள் ராம ஜெயந்தி (45) ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் மேலநம்பிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து இரண்டு நாள்களாக விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (18)
மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த
சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) ஆகிய இருவருக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் கஞ்சா போதையில் கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் வேல்முருகன், முகேஷ் கண்ணன் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த போது தப்பியோடி உள்ளனர். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளியான மேல நம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (25) என்பவர் அயன் வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து
தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில்
நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதி மணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 9 தனிப்படைக்கள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடினர். அயன் வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு படுகையோர காட்டு பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 12 மணி நேரமாக ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு தேடிவந்த நிலையில் முனீஸ்வரன் சிக்காமல் போலீசாருக்கு தண்ணீர் காட்டி வந்த நிலையில், புதன்கிழமை இரவு அயன் வடமலாபுரத்தில் உள்ள அவரது சகோதரி செல்வராணி வீட்டிற்கு முனீஸ்வரன் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தாகவும், இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கைது செய்ய முயன்ற போது முனீஸ்வரன் மீண்டும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அப்போது போலீசார் முனீஸ்வரனை சுற்றி வளைத்து பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த முனீஸ்வரன்,பசி ஏற்பட்டு சாப்பிடுவதற்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், போலீசார் வரும் சத்தம் கேட்டதும் முனீஸ்வரன் கதவை உடைத்துக் கொண்டு தப்பி தெருக்களில் ஓடியுள்ளார் அப்போது போலீசார் சுற்றி வளைத்து காரில் ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.