போக்குவரத்துக்கு லாயக்கற்ற விளாத்திகுளம் to பெருநாழி சாலை : வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பெருநாழி செல்லும் சாலை வழியாக தான் கமுதி, பெருநாழி,பரளச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், அதேபோல் ராமச்சந்திராபுரம்,முத்தையாபுரம்,புதுகிராம்,காடல்குடி, சுப்பையாபுரம், மிட்டா வடமலாபுரம்,மாவிலோடை, சின்னூர்,என்.ஜெகவீரபுரம்,பி.ஜெகவீரபுரம், பூதலாபுரம்,கந்தசாமிபுரம்,புதுச்சின்னையாபுரம்,சேர்வைக்காரன்பட்டி,சங்கரப்ப நாயக்கன்பட்டி, மாதலாபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட 70-க்கு மேற்பட்ட கிராமங்களின் அன்றாட தேவைக்கும், அதேபோல் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகள் தினமும் செல்லும் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
விளாத்திகுளம் பெருநாழி விளக்கிலிருந்து பெருநாழி வரை சுமார் 22 கிலோமீட்டர் தூரமாகும், இதில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதி 15 கிலோமீட்டர் 600 மீட்டர் தூரமாகும், இதில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள சாலைகள் ஒற்றை வழி சாலையாக உள்ளது, கடந்த சில ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட இரட்டை வழி மற்றும் ஒற்றை வழி சாலைக்கு சாலையின் பக்கவாட்டில் சரல்மண் அடிக்கப்படவில்லை இதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகி செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, புதிதாக போடப்படும் சாலைகளுக்கு ஒப்பந்தத்தின் போதே சாலையின் இருபுறமும் சரல்மண் அடிக்க வேண்டும் என்று உத்தரவு உள்ள நிலையில், பெருநாழி to விளாத்திகுளம் சாலைப் பகுதியில் எந்த ஒரு புதிதாக போடப்பட்ட சாலைக்கும் சரல்மண் ஏதும் அடிக்காமல் சாலையின் அருகே உள்ள விளைநிலங்களில் உள்ள கரம்பை மண்களை எடுத்து சாலைகளுக்கு "அண்ட கொடுத்து" வைத்துள்ளனர், அவ்வாறு சாலையின் பக்கவாட்டில் போடப்படும் கரம்பை மண்கள் ஒரு மழையிலே கரைந்து ஓடுகிறது,இதனால் சாலைக்கும் தரைதளத்திற்கும் சுமார் 3 அடி உயரத்திற்கு பள்ளமாக உள்ளது...
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டால், சரல்மண் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்று “ மழுப்பலான ” பதில்களை கூறுகின்றனர், ஆனால் விளாத்திகுளம் பகுதி வேம்பார் சாலை மற்றும் விளாத்திகுளம் மதுரை சாலை, எட்டையாபுரம் சாலை குளத்தூர் சாலை,உள்ளிட்ட பகுதிகளில் புதிய வீட்டுமனை விற்பனை இடங்களுக்கு மட்டும் எவ்வாறு சரல்மண் வருகின்றது ? ஒருவேளை செவ்வாய் கிரகத்திலிருந்து சரல்மண் கொண்டுவரப்படுகிறதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்...
இந்தாண்டு விளாத்திகுளம் to பெருநாழி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிக்காக எந்த நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்படவில்லை என்று நெடுஞ்சாலை துறை சார்பில் கூறப்படுகிறது.
எனவே பொதுமக்களின் உயிரின் மீது அக்கறை கொண்டு அரசு சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சாலை விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.