எட்டயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை - 2 பேர் கைது!


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் இன்று மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து எட்டையபுரம் நோக்கி அவ்வழியாக வந்த TN96 H8006 என்ற வாகனப் பதிவெண் கொண்ட காரை மறித்து போலீசார் சோதனையிட்டதில் காரில் 6 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த மணியக்காரன்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்த குருசாமி பிள்ளை மகன் கண்ணன் (47) மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட கவுண்டம்பட்டி செந்தில்வேல் மகன் மாரீஸ்வரன்(23) ஆகிய இருவரையும் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட கண்ணன் மீது ஏற்கனவே இது போன்ற வழக்குகள் உள்ளது என்றும், காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.36 ஆயிரம் என்ன போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.