விளாத்திகுளம் அருகே கீழ வைப்பார் புனித மோட்ச இராக்கினி மாதாவின் 467-வது பெருவிழாவை முன்னிட்டு பிரமாண்டமாக நடைபெற்ற திருத்தேர் பவனி - வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் கிராமத்தில் 467 ஆண்டுகள் பழமை வாய்ந்த "புனித மோட்ச இராக்கினி மாதா ஆலயம்" என்ற புகழ்பெற்ற திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் முதன்மை கடவுளாக மோட்ச இராக்கினி மாதா அருள்பாலிக்கிறார். முந்தைய காலங்களில் மக்கள் மோட்சம் அடைவதற்கு உதவி புரிந்த சிறப்பை பெற்றதினால், இக்கடவுள் மோட்ச இராக்கினி மாதா என அழைக்கப்படுவதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மோட்ச இராக்கினி மாதாவின் சிலை இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகழ்பெற்ற ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பெருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பு திருப்பலி பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு 10-ம் நாளன்று மோட்ச இராக்கினி மாதாவின் அலங்காரத் தேர்பவனியுடன் ஆலய பெருவிழாவானது வெகு விமர்சையாக திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான ஆலய பெருவிழாவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ஆலயத்தில் உள்ள அன்னைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு, ஆலயத்தின் கொடிமரத்தில் திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வந்த இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள், அன்னைக்கு உயர் வணக்கம் மற்றும் மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதனைத்தொடர்ந்து ஆலயப்பெருவிழாவின் 10-ம் நாளான இன்று ஆலய அன்னையின் அலங்காரத் திருத்தேர்பவனியானது, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து மக்களும் உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரினை பின்தொடர்ந்தது வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் விழுந்து வணங்கி "கும்புடுசரணம்" போட்டுக்கொண்டே ஆலயம் வரை சென்றும், 6' அடி உயரம் கொண்ட மெழுகுவர்த்திகளை ஆலயத்திற்கு வழங்கியும் தங்களது நேர்த்திக்கடன்களை செய்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் சவுதி, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து அன்னையை தரிசனம் செய்தனர்.
பின்னர், ஆலயத்தின் 467-வது பெருவிழாவை முன்னிட்டு அறுசுவை அசைவ விருந்து அனைவருக்கும் சிறப்பு அசன விருந்தாக வழங்கப்பட்டது.