தூத்துக்குடி - விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் எல்லையில் வாகனச்சோதனையில் ஈடுபடாத போலீசார் : விளாத்திகுளம் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் கிடையாதா?

நாடு முழுவதும் வருகின்ற 2024 மக்களைவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தீவர சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள், காணொலி கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட எல்லைகளில் என விறுவிறுப்பாக தீவிர வாகனச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைத்து வருகின்றனர். 

இதுபோன்று தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில்,  தூத்துக்குடி - விருதுநகர் செல்லும் சாலையில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னமரெட்டியபட்டி கிராமத்திலும், அதேபோன்று தூத்துக்குடி - இராமநாதபுரம் செல்லும் ECR சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லைச் சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடாமல் இருப்பதால் இவ்வழியாக செல்லும் கார், லாரிகள், லோடு ஆட்டோ போன்ற அனைத்து வாகனங்களும் எவ்வித சோதனைகளுமின்றி சுலபமாக செல்லக்கூடிய சூழல் நிலவி வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இதுபோன்று மாவட்ட எல்லையில் அமைந்திருக்கூடிய சோதனைச் சாவடியிலேயே சோதனைகள் நடைபெறாமல் இருப்பது தேர்தலுக்கான பணப்பட்டுவாடா செய்வதற்கு காவல்துறையும் உதவுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது....ஆகையால், தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வேம்பார் மற்றும் சென்னமரெட்டியப்பட்டி ஆகிய 2 சோதனைச் சாவடியில் தற்போது அங்கு பணியில் இருந்து கொண்டே சோதனைப் பணிகள் மேற்கொள்ளாமல் இருக்கும் காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அத்தோடு அங்கு சோதனை பணிகளை தீவரப்படுத்த வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.