"அதிமுகவின் எழுச்சியை கண்டு திமுக கூட்டணியில் சலசலப்பு வந்துவிட்டது" - விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி "மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை முன்னிட்டு கட்சியினரிடம் அதற்கான ஆலோசனைக் கூட்டம் என்று விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "தற்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் அளித்து வரும் அமோக ஆதரவையும், அதிமுகவின் எழுச்சியையும் கண்டு திமுக கூட்டணியில் சலசலப்பு வந்துவிட்டது என்று கூறி கட்சியினரிடைய வருகின்ற 2026 இல் அதிமுக கட்டாயமாக ஆட்சி அமைக்கும் என்று பேசி புத்துணர்ச்சி அளித்துள்ளார். அத்தோடு முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளாத்திகுளம் தொகுதிக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருகை தரும் தினத்தன்று கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,என்.கே பெருமாள், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முயசக்தி ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ், போடுசாமி, தனஞ்செயன், தனபதி,அன்புராஜன், நகர செயலாளர் ராஜகுமார், மாரிமுத்து,ஆண்டி மகளிர் அணி பிரியா,சாந்தி, அதிமுக நிர்வாகிகள் பெருமாள்சாமி, குட்லக்செல்வராஜ், வரதராஜபெருமாள்,விஜயகுமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்குமார், சுரேஷ்,மோகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.