ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக சரளாதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புதூர் வட்டாரத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மரியாதையின்றி மிகவும் தகாத வார்த்தைகளால் ஒருமையில் திட்டுவதாகவும், தன்னுடைய சொந்த வேலைகளை செய்யும்படி மிரட்டி வற்புறுத்துவதாகவும், ஒவ்வொரு மையத்தில் இருந்தும் லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சரளா தேவியின் சொந்த வேலைகளை செய்ய மறுக்கும் பணியாளர்கள் மீது காழ்புணர்ச்சியோடு செயல்பட்டு பணி நேரத்தை விட கூடுதலாக வேலை வாங்குவதற்காக வேண்டுமென்றே மிகவும் கால தாமதமாக மாலை நேரங்களில் அங்கன்வாடி மையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்வதாகவும், அடிக்கடி MEMO கொடுப்பதகாவும், பணிப்பதிவேடுகளை புதூர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து பணியாளர்களை அலைக்கழிப்பதாகவும் புதூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இது பற்றி பலமுறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உயர் அதிகாரிகள் முதல் துறை அமைச்சர் கீதா ஜீவன் வரை பல புகார்கள் அளித்தும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவியை மாற்ற வலியுறுத்தியும், அவர் மீது நல்லடி கெடுக்க வழி நிறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி செயல்பட்டு வருவதாகவும், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையைடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மூன்று மணி நேரத்துக்கு மேல நடைபெற்ற இந்த போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.