"பெண் அலுவலரின் டார்ச்சர் தாங்க முடியல..." : அதிகாரி முதல் அமைச்சர் வரை SILENT MODE : - கொதித்தெழுந்த அங்கன்வாடி பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் வட்டாரத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா தேவியை மாற்றக்கோரி புதூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது...




விளாத்திகுளம் அருகே புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராக சரளாதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புதூர் வட்டாரத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மரியாதையின்றி மிகவும் தகாத வார்த்தைகளால் ஒருமையில் திட்டுவதாகவும், தன்னுடைய சொந்த வேலைகளை செய்யும்படி மிரட்டி வற்புறுத்துவதாகவும், ஒவ்வொரு மையத்தில் இருந்தும் லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சரளா தேவியின் சொந்த வேலைகளை செய்ய மறுக்கும் பணியாளர்கள் மீது காழ்புணர்ச்சியோடு செயல்பட்டு பணி நேரத்தை விட கூடுதலாக வேலை வாங்குவதற்காக வேண்டுமென்றே மிகவும் கால தாமதமாக மாலை நேரங்களில் அங்கன்வாடி மையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்வதாகவும், அடிக்கடி MEMO கொடுப்பதகாவும், பணிப்பதிவேடுகளை புதூர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து பணியாளர்களை அலைக்கழிப்பதாகவும் புதூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இது பற்றி பலமுறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உயர் அதிகாரிகள் முதல் துறை அமைச்சர் கீதா ஜீவன் வரை பல புகார்கள் அளித்தும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி மீது சமூக நலத்துறை அமைச்சரே நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.


இவ்வாறு தனது அதிகாரத்தை மிகவும் தவறாக பயன்படுத்தி வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி அட்டூழியத்தினால் பல அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதோடு, சிலர் பணியில் இருந்து விலகி விட்டதாகவும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். எனவே பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அலுவலகத்தின் முன்பு 60க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புதூர் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியப்பின் கலைந்து சென்றனர்.