விளாத்திகுளம் பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை!



கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (45/26) என்பவர் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கிழ் வழக்குபதிவு செய்தனர். மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திருமதி. பிரீத்தா  இன்று (25.03.2026) மேற்படி எதிரி கருப்பையா என்பவரை குற்றவாளி என உறுதி செய்து சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 வருடங்கள் சிறை தண்டனை, ரூபாய் 5,000/- அபராதமும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை  ரூபாய் 10,000/- அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 2,500/- அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் கலா, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ அவர்களையும், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் திருமதி. ஸ்டெல்லா மேரி, சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.