*உங்க தெருவுக்கு தூத்துக்குடி கலெக்டர் தான் ரோடு போடுவார் - ஒப்பந்ததாரர் பேச்சால் விளாத்திகுளம் அருகே கிராம மக்கள் வேதனை*
*விளாத்திகுளம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு*
*100 வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றாமலே ஊதியத்தை ஏற்றி ஒப்பந்ததாரர் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு*
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ ஈரால் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நற்கலைக்கோட்டை கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் தேசிய மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வறுகால் அமைக்காமல் சிமெண்ட் சாலை அமைக்கப்படுவதால் கழிவுநீர் தேங்கும் நிலை இருப்பதாகவும், ஏற்கனவே மழைக் காலங்களில் மிகுந்த சிரமம் அடைந்து வரும் நிலையில் வறுகால் அமைக்காமல் சாலை அமைத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை இருப்பதாக இந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்..வாறுகாலுடன் தான் சாலை அமைக்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி செயலரிடம் கோரிக்கை வைத்து கேட்கவில்லை என்றும், தற்போது சாலை அமைக்கும் பகுதியில் நடுவில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மின் கம்பங்களை அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் செலவாகும் நானா தர முடியும், நீங்கள் கொடுங்கள் என்று கேட்பது மட்டுமின்றி, தூத்துக்குடி கலெக்டர் வந்து உங்களுக்கு ரோடு போடுவார் என்று ஒப்பந்ததாரர் அலட்சியமாக பேசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள மக்களிடம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வந்த ஊதியத்தில் 3000 ரூபாயை ஒப்பந்ததாரர் மயில் கர்ணன் வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றாமலே பணத்தை ஏற்றி அதை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாலை நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றி வாறுகாலுடன் தங்கள் பகுதிக்கு , சாலை அமைக்க வேண்டும், அலட்சியமாக செயல்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி செயலாளர் சிவ பாலனிடம் கேட்ட போது, சிமெண்ட் சாலை அமைக்க மட்டுமே நிதி வந்ததாகவும், தற்போது அப்பகுதி மக்கள் வாறுகாலுடன் சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அந்த பணிகளை நிறுத்திவிட்டதாகவும், மேலும் சாலையில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், சாலை அமைக்கும் பணிகள் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறுவதால் அதில் 10சதவீதம் பணிகள் அந்த பணியாளர்கள் மூலம் நடைபெற வேண்டும், அவர்களுக்குத்தான் அதில் பணம் ஏறும், அதில் குறிப்பிட்டுத் தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டும் அது வழக்கமான நடைமுறைதான் என்றார்.
சிலர் அவர்கள் சொந்த இடத்திற்கு சாலை போடச் சொன்னதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாக ஒப்பந்ததாரர் மயில் கர்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.