விளாத்திகுளத்தில், சித்திரை திருவிழாவின் இறுதி நாளான இன்று சிறப்பாக நடைபெற்ற "பொன்னூஞ்சல் வைபவம்" : பக்தி பரவசத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று வரை கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 12 நாட்கள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி அம்பாள் வீதியுலா, கோலாட்டம் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாண வைபவம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதியும், தேரோட்டம் கடந்த 9-ம் தேதியும் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனையடுத்து சித்திரை திருவிழாவின் இறுதி நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகளுக்கு கல்யாண கோலத்தில் பொன்னூஞ்சல் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பஞ்ச ராகங்களில் வாசிக்கப்படும் நாதஸ்வர இசையில், சுவாமிகளின் பொன்னூஞ்சல் ஆடும் அற்புதமான நிகழ்வை பக்தி பரவசத்துடன் ஆனந்தமாக கண்டுகளித்தனர். மேலும் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான இன்று இந்த பொன்னூஞ்சல் வைபவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.
விளாத்திகுளத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களும், வைபவங்களும் நடைபெறும் என்ற சிறப்பினைக் கொண்டுள்ள திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.