விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரூ.2 ஆயிரம் திருடிய திருடனை 5 ஆண்டுகளுக்கு பின் கைது செய்த போலீசார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று இரவு வழக்கம் போல பூஜைகள் முடிவுற்றவுடன் கோவில் நடை சாற்றப்பட்டுள்ளது. அன்று கோவிலில் இரவு காவல் பணியில் ஆவுடையப்பன் என்பவர் இருந்துள்ளார். பின்னர் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோவிலின் முன் மண்டபத்திலிருந்து சத்தம் என்னவென்று காவலாளி ஆவுடையப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார். இவர் வருவதைக் கண்டவுடன் யாரோ வேகமாக தப்போடியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவலாளி ஆவுடையப்பன் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அங்கு சென்ற விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து காவலாளி ஆவுடையப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் திருநெல்வேலி இணை ஆணையர் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பிரிவு 457 மற்றும் 380-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் ஆரோக்கிய ஜோதி (41) என்பவரை கைரேகை அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 2019-ம் ஆண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உண்டியலை உடைத்து திருடி தப்பியோடிய நபர் இவர்தான் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து இவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற போலீசார் ஆரோக்கிய ஜோதியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.