விளாத்திகுளம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் "மஹா கும்பாபிஷேக விழா" : திரளான பக்தர்கள் தரிசனம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள முத்துக்குமாரபுரத்தில், அமைந்துள்ள "அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் இன்று புனராவர்த்தன ஜுர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, ஸ்ரீ கணபதி பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், பிரம்மசக்தி பிம்ப ரக்ஷாபந்தனம், நாடி சந்தனம், ஸ்பரிசாகுதி, பிம்பாகுதி உள்ளிட்ட பூஜைகள் செய்தப்பின்னர் விசேஷ திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைக்குரிய மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், விசேஷ தீபாராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. பின் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது கும்ப அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர், என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் முத்துக்குமாரபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.