விளாத்திகுளம் அருகே நெடுஞ்சாலையில்(NH-38) மேம்பாலத்திற்கு மேலேயும் விரிசல், கீழேயும் விரிசல் : சேதமடைந்த பாலத்தையும், தேசிய நெடுஞ்சாலையையும் சீரமைக்க கோரிக்கை!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) கட்டுப்பாட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தை அடுத்து அமைந்துள்ள மேம்பாலத்தில், பாலத்திற்கு மேலே குறிப்பிட்ட இடைவெளிகள் விட்டு பதிக்கப்பட்டு இருக்கக்கூடிய கம்பிகள் பெயர்ந்து அதில் செல்லும் வாகனங்களில் டயர்களை சேதப்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. அதன் அருகில் சாலைகள் பெயர்ந்து குழியுடன் காணப்படுவதால் இதனைக் கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி வருவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பாலத்தின் கீழேயும்... அடித்தள கான்கிரட்டுகள் (BASEMENT CONCRETE) பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. ஆகையால், உடனடியாக இப்பாலத்தினை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பாலத்தின் தரத்தினை உறுதி செய்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க... தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடியின் பராமரிப்பின் கீழ் இருந்து வரும் இந்த தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் சேதமடைந்தது, குண்டும் - குழியுமாக போக்குவரத்திற்கு முற்றிலும் லாயக்கற்ற நிலையில் தொடர்ந்து இருந்து வருவதாகவும், இதன் காரணமாகவே நூற்றுக்கும் அதிகமான வாகன விபத்துக்கள் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்ததையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்ததோடு சாலையை நல்ல முறையில் சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பொருப்படுத்தாமல் சுங்கச்சாவடியின் சார்பில் எந்தவொரு சீரமைப்பு பணியிலும் நடைபெறாததால் தற்போது வரை இந்த தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவே காணப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், 4 மாதங்களுக்குள் இந்த தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில், ரூ.207.72 கோடி செலவில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) 128.065 கி.மீ தூரத்திற்கு கால இடைவெளியில் புதுப்பிப்பதற்கான ஏலம் விடப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதீத அலட்சியமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இச்சாலையில் நாள்தோறும் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஸபோர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு இந்த தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை (NH-38) சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது இச்சாலையை கடந்து செல்லும் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது....