விளாத்திகுளம் அருகே  கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவன் : மகள் வீசிய கயிற்றால் உயிர் பிழைத்த சம்பவம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (48) என்பவர் அப்பகுதியில் விவசாயப்பணி செய்துவருகிறார்.  இவருக்கும் - இவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும் (46).  இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக கிருஷ்ணவேணி வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது  கணவர் கண்ணனும் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளனர். இதனை பார்த்த அவரது மகள் அபர்ணா தோட்டத்தில் கிடந்த கயிற்றை எடுத்து கிணற்றுக்குள் வீசி உள்ளார். அந்தக் கயிற்றை கண்ணன் பிடித்துக் கொண்டு அவரது மனைவியை தண்ணீரில் மூழ்க விடாமல் காப்பாற்றி முயற்சி செய்துள்ளார். இதற்கிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.