கமுதி அருகே முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் பசும்பொன்னிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும்பங்காற்றி “ தேசியமும் தெய்வீகமும்” தனது இரண்டு கண்களாக கொண்டு தேசிய உணர்வை ஏற்படுத்திய, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கடந்த அக்டோபர் 28,29,30 ஆகிய தினங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்ககவசம் அணிந்த திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜைக்காக அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசம் கடந்த அக்டோபர் 25ம் தேதி மதுரை பேங்க் ஆப் பரோடா வங்கி லாக்கர்லிருந்து கொண்டுவரப்பட்டு தேவர் சிலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேவர் ஜெயந்தி விழா நிறைவு பெற்ற நிலையில், அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட தங்க கவசம் இன்று நல்ல நேரம் சரிபாக்கப்பட்டு நண்பகல் 12:30 மணி அளவில் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிக்கப்பட்ட சுமார் 13 1/2 கிலோ எடை கொண்ட தங்க கவசம், பசும்பொன் கிராமத்திலிருந்து மதுரை பேங்க் ஆப் பரோடா வங்கி துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
தேவர் நினைவாலயம் சார்பில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று தேவர் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக,நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும் கலந்து கொண்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் பசும்பொன் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.