விளாத்திகுளம் அருகே விபத்தில் மூளை சாவடைந்த விவசாயின் உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் - அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி சடங்கு ..!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (42). விவசாயியான இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 20ந்தேதி அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில் உரக்கடையில்  விவசாய பணிகளுக்காக உரம் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் விவசாயி கிருஷ்ணசாமி மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து விவசாய உடலை உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் நேற்று உடல் உறுப்பு தானத்தினை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து விவசாயி கிருஷ்ணசாமி உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. விவசாயி கிருஷ்ணசாமி உடல்,  உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட காரணத்தினால் தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் , விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன்,மாவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் விவசாயி கிருஷ்ணசாமி உடல் எரியூட்டப்பட்டது.