விளாத்திகுளம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தவெக-வினர்!


தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விளாத்திகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் மழை வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் வீட்டிலிருந்த சமையல் பொருட்கள், டி.வி, மின் விசிறி உட்பட அனைத்து பொருட்களும் வெள்ளத்தினால் நீரீல் மூழ்கிய நிலையில், அக்கிராம மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தற்போது பாதுகாப்பாக அங்கு அமைந்துள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்கி வருகின்றனர்.. இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பொன் காசிராம், செண்பகம் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் அக்கிராமத்திற்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு, பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களை வழங்கியுள்ளனர். இவ்வாறு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளித்த தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு கிராம மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.