"விளையாட்டுத் துறை அமைச்சரின் விளையாட்டுப்போக்கால் பாதிக்கப்படும் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்" : பிற மாநில அரசுகள் வீரர்களுக்கு வெகுமதி, அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மறுப்பது ஏன்? : MLA,M.P.-யிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் - சண்முகக்கனி தம்பதியினரின் மகன் மகாராஜா(25). இவர் பிறப்பிலிருந்தே கண் பார்வையை முற்றிலுமாக இழந்த இவர் பெற்றோரின் அரவணைப்பு மற்றும் தனது விடாமுயற்சியினால் பார்வையிழப்பை ஒரு பொருட்டாக கருதாமல் B.A ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு வரை பயின்றுள்ளார். அத்தோடு, இவ்வுலகில் தானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு முயற்சியுடன் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் பயிற்சியில் இறங்கிய மகாராஜா இந்திய பார்வையற்றோருக்கான ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டில் இருந்து விளையாடும் வாய்ப்பைப் பெற்று தற்போது இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் ஆண்கள் போட்டியில் இந்தியா அணிசார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆனால் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் தமிழக வீரர் மகாராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் எந்தவித பாராட்டுக்களும் வெகுமதியும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்துள்ளது... இருந்த போதிலும், தனது தந்தை சிவசுப்பிரமணியன் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா தனது தாயுடன் தனியாக ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு வெள்ளிப் பதக்கம் என்ற விளையாட்டு வீரர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய ரூ.15 லட்சம் வெகுமதியும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு துளியும் முன்வரவில்லை என்பதே நிதர்சனம். இதனால் மகாராஜா விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் தனது குடும்ப சூழ்நிலையை கருதி உடனடியாக தனக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய வெகுமதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து மனு அளித்தும், நேரில் சந்தித்து தெரிவித்திருந்தும் தமிழக அரசின் பார்வை இந்தப் பார்வையற்ற விளையாட்டு வீரரின் மீது படவே இல்லை.
அதுமட்டுமின்றி, பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜாவுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய அணி வீரர்களுக்கு அந்தந்த மாநில அரசு சார்பில் வெகுமதி தொகை மற்றும் அரசு வேலை வழங்கி நம் மாநில அரசுக்கள் கௌரவித்தன.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜாவே சென்று பலமுறை அலைந்து திரிந்து மாவட்ட ஆட்சியர், MLA, M.P, சபாநாயகர் அப்பாவு என பலரிடமும் தனது கோரிக்கையை மனுவாக கொடுத்து ஏமாற்றத்தை மட்டுமே மகாராஜா தற்போது வரை சந்தித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலி கிரிக்கெட் வீரர் வினோத் பாபு நகைச்சுவை நடிகர் வடிவேலு பானியில் போலியாக கிரிக்கெட் கோப்பையை வாங்கிக்கொண்டு மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டில் உலககோப்பை வென்றிருப்பதாக அமைச்சர்கள் ஆரம்பித்து தமிழக முதல்வர் வரை நேரடியாக சென்று ஏமாற்றியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அப்படிப்பட்ட கூலி வீரர்களை கௌரவித்த இந்த தமிழக அரசு, மகாராஜா போன்ற உண்மையான மாற்றுத்திறனாளி வீரர்களை சிறுதுளி கூட ஊக்கப்படுத்தாமல் புறந்தள்ளி வருகிறது. இந்த பார்வையற்ற விளையாட்டு வீரர் மகாராஜாவின் கோரிக்கை பற்றி பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியான நிலையிலும் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விளையாட்டுப் பிள்ளை போன்றே தற்போது வரை செயல்பட்டு வருகிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த ஏழ்மையான சூழ்நிலையில் பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா வருகின்ற ஜூலை 25-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற உள்ள சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அமெரிக்காவில் நடைபெற உள்ள சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்வதற்கு போதுமான பண வசதி இல்லை என்பதால் மகாராஜா தனக்கு உதவ வேண்டுமென்று தொடர்ந்து தமிழக அரசுடன் கோரிக்கை வைத்து வருகிறார். ஆகையால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சார்பில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒரே வீரரான மகாராஜாவின் திறமைக்கு மதிப்பளித்து அவருக்குரிய வெகுமதி தொகை ரூ.15 லட்சம் மற்றும் அரசு வேலையை உடனடியாக வழங்குவதோடு மட்டுமின்றி அமெரிக்காவில் நடைபெற உள்ள சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் வரவேற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜாவுக்கு போதுமான நிதியுதவி மாநில அரசு சார்பில் வழங்க வேண்டும் என்றும் பார்வையற்ற இந்திய கிரிக்கெட் வீரர் மகாராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
(தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அன்றைய தினமே பல குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உடனடியாக பறந்து சென்று கொடுத்த விடியா திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய துறையின் கீழ் வரும் தமிழக பார்வையற்றோர் கிரிக்கெட் அணியிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் வென்று மிகப்பெரிய சாதனை புரிந்துள்ள மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருக்கான வெகுமதியை தானாக முன்வந்து வழங்காமல் இருந்தது ஒரு மோசமான நிர்வாகம் என்றால்.... மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை வழங்காமல் இருப்பது இந்த விடியா திமுக ஆட்சியின் மீதும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....)