விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த :ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், வைப்பார்-1 கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (15.02.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம், பல்லாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.குருசாமி (வயது 40), த/பெ.ஆண்டி என்பவர் தனது உறவினர்கள் 5 நபர்களுடன் இருசக்கர வானத்தில் பல்லாக்குளம் கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, இராமநாதபுரம், சாயல்குடி கிராமத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த ரூரிஸ்ட் வாகனமும் மேற்படி இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த திரு.குருசாமி, திருமதி.மேரி
(வயது 52) க/பெ.சன்னாசி, திருமதி.முத்துலட்சுமி (வயது 48) க/பெ.தங்கவேல், செல்வன்.முகில் அரசன் (வயது 5) த/பெ.முனியசாமி, செல்வன்.சுமித்ரன் (வயது 3) த/பெ.முனியசாமி ஆகிய ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.