விளாத்திகுளம் அருகே சொத்தைப் பிரித்து தர மறுத்த தாயை - நண்பருடன் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசிய மகன்!
போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் அம்பலம் - தாயை கொலை செய்த மகன் மற்றும் அவரது நண்பர் கைது!
கை, கால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் கண்டெடுப்பு - போலீசார் தீவிர விசாரணை...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், கடந்த 11ந்தேதி அக்கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள ஊரணியில் இருந்த கிணற்றில் 70 வயது முதாட்டியான பேச்சியம்மாள், அவரது கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டப்பட்டவாறும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் காடல்குடி காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்களை வரவழைத்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன மூதாட்டி காட்டுப் பகுதியில் உள்ள ஊரணி கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக கண்ணெடுக்கப்பட்டது தொடர்பாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதுமட்டுமின்றி, நகைக்காக மூதாட்டி பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டரா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்தினரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அதில் மூதாட்டியின் மூத்த மகன் சக்திவேல் (50). முன்னுக்கு பின் முரணாக பேசியதை பார்த்த போலீசார் தங்களது பாணியில் விசாரித்த போது சொத்தை பிரித்து தர ஆத்திரத்தில் தனது தாயை கொலை செய்ததாக சொன்ன தகவல் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப சொத்தை பிரித்து தரும்படி சக்திவேல், தனது தாய் பேச்சியம்மாளிடம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து உள்ளார். இப்போது தனியாக பிரித்து கொடுக்க முடியாது. 6 பேரையும் மொத்தமாக வைத்து தான் பிரித்து தருவேன் என்று கூறி பேச்சியம்மாள் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த சக்திவேல், ஆடுமேய்க்கும் போது நண்பராக இருந்த உச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (55) என்பவருடன் மது அருந்தி விட்டு, கடந்த 3ந்தேதி தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பேச்சியம்மாளிடம், சக்திவேல் மீண்டும் சொத்தில் தனக்குள்ள பங்கினை பிரித்து தரும்படி கேட்டுள்ளார். தன்னால் பிரித்து கொடுக்க முடியாது என்று பேச்சியம்மாள் கூற, ஆத்திரம் தலைக்கு ஏற, பேச்சியம்மாள் வைத்திருந்த துண்டை பிடிக்கிய சக்திவேல், தனது தாய் கழுத்தில் துண்டை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து தனது நண்பர் முருகன் உதவியுடன் அருகில் கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டி , உடலில் கல்லை கட்டி போட்டுள்ளனர். பின்னர் தனது உறவினர்களுடன் தனது தாயை தேடுவது போல தேடியுள்ளார். போலீசார் அவரது தாய் சடலத்தை மீட்ட போதும் எதுவும் தெரியாத அப்பாவி போல், தாயை பறிகொடுத்த மகனாக இருந்துள்ளார். ஆனால் போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் உண்மை அம்பலமானது. இதையெடுத்து சொத்தை பிரித்து தராத காரணத்தினால் தாயை கொலை செய்த சக்திவேல், அவருக்கு உதவிய முருகன் இருவரையும் காடல்குடி காவல் நிலைய
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.