விளாத்திகுளம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரம் -:விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டு ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காசோளம் , வெள்ளைச் சோளம், , மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு இருந்தனர். வியாபாரிகள் கொடுத்த விதைகள் தரம் இல்லை என்பதால் செடியில் பூ பூத்து நோயினால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.தற்போது அதன் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ. 20க்கு குறைவாக தான் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒருஏக்கருக்கு 50 கி கொண்ட 3 பை( 150 கி) வெங்காயம் நடவு செய்யப்பட்டு கோடை உழவு, பருவ உழவு, அடி உரம் டிஏபி, மேலுரம் மற்றும் 2 முறை களைப்பறிப்பு உள்ளிட்டவருக்கு ரூ 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில் விளாத்திகுளம, புதூர் நாகலாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது.தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் தீவிரமாக சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விளைச்சல் குறைவாக இருந்தாலும் போதிய விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டை விட மிகக் குறைந்த விலையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.