விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - காமக்கொடூர ஆசிரியர் உட்பட பெண் தலைமை ஆசிரியர் மீதும் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு...!



*தலைமறைவான இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை என்ற ஹென்றியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!**




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் தியாகராஜன் என்ற ஹென்றி(41) புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறான். இந்த காமக்கொடூர ஆசிரியர் தியாகராஜன் மீது அப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிகள், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, தலைமறைவான ஆசிரியர் தியாகராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரை அலட்சியப்படுத்திய புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லைட்(51) மீதும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் 6 முதல் 12ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மகனான தியாகராஜன் என்ற ஹென்றி இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறான். இப்பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு வேளாண்மைப்பிரிவு மாணவர்களை பள்ளியில் இருந்து கடந்த மாதம் (13.10.2025) அன்று புதூர் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி கிராமத்திற்கு புள்ளியியல் பாட செயல்முறை பயிற்சிக்காக விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவ-மாணவிகளை 6 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அப்போது மாணவிகளுடன் சென்ற ஆசிரியர் தியாகராஜன், 12-ம் வகுப்பு மாணவியின் அந்தரங்க பகுதியில் கைவைத்து, ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி காமக்கொடூரனின் கையை தட்டி விட்டு ஓடிச்சென்று தன் தோழிகளிடம் அழுது கொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது பிற மாணவிகளும் தங்களுக்கும் இதே போன்று ஆசிரியர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் பள்ளிக்கு வந்த பின் தனது வகுப்பு ஆசிரியையிடம் மாணவிகள், இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறியுள்ளனர். இதைக் கேட்ட வகுப்பாசிரியர் மாணவிகளுடன் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லைட்-யிடம் புகார் கூறிய நிலையில், அதனை பெண் தலைமை ஆசிரியர் சிறிது கூட பொருட்படுத்தாமல் "இதெல்லாம் சகஜம்தான்.. பெருசு படுத்தாதீங்க... நம்ம பள்ளியின் பெயர் கெட்டுப் போயிடும்.. போங்க, போங்க..." -இன்று மிகவும் அலட்சியமாக பதில் கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.


பின், இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து... விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் காமக்கொடூரன் ஆசிரியர் தியாகராஜன், தங்களுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் பற்றி மாணவிகள் புகார் அளித்தனர். மாணவிகளின் புகாரின் அடிப்படையில், போலீசார் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்திய பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லைட் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


மேலும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் தலைமறைவான நிலையில், 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமாக தேடி வருகின்றனர்.