விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா - சாதி, மதபேதமின்றி குவியும் பொதுமக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் "சந்தனக்கூடு" திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. 'எம்மதமும் சம்மதம்' என்பதற்கேற்ப மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில், அனைத்து மதத்தினராலும் இந்த வைப்பார் தர்ஹாவில் கோலாகலமாக கொண்டப்படும் இந்த விஷேச திருவிழாவில் பக்தர்களுக்கு, இந்து கோவில்களில் வழங்குவதைப் போல விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும் தனிச்சிறப்பினை இந்த வைப்பார் கிராமத்திலுள்ள தர்கா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஏர்வாடி தர்ஹாவிற்கு அடுத்தபடியாக, தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்த வைப்பார் தர்ஹாவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர் என்பது சிறப்புடையதாக கருதப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. பண்டைய பாண்டிய காலத்தில்,ஹஜ்ரத் சம்சுதீன் ஷஹீது வலியுல்லா அன்ஹு, என்பவர் ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீத்தின் இராணுவத்தில் போர்ப்படை தளபதியாக இருந்து பல போர்களில் வெற்றிவாகை சூடியுள்ளார். அப்போது, விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாற்று படுகையோரம் அமைந்துள்ள கிராமமான இந்த வைப்பார் கிராமத்தில் நடந்தப் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். இவரது உடல் ஏர்வாடி தர்ஹாவிற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டு, அடக்கஸ்தலம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் போரில் இரத்தம் சிந்திய இடமான இக்கிராமத்தில், இவரின் நினைவாக இந்த தர்ஹாவானது, மிகவும் அழகான மற்றும் அமைதியான சூழலில் ஆன்மீக குணப்படுத்தும் மையமாக செயல்படுகிறது. மேலும் அனைத்து மத மக்களும் மதபேதமின்றி இங்கு வந்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தகைய பழம்பெருமைகளைக் கொண்டுள்ள இந்த வைப்பார் "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹாவில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் 'சந்தனக்கூடு திருவிழாவானது' மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கடந்த செப்டம்பர் 4-ம் தேதி மாலை 6 மணியளவில், ஏராளமானோர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதனையடுத்து இன்று (செப்டம்பர் 17-ம் தேதி) இரவு 10 மணியளவில் மெவ்லிது சரிப் நடைபெற்று பின் நள்ளிரவு 1 மணியளவில், அக்கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் வீட்டிலிருந்து சந்தனக்கூடு புறப்பட்டு மிகப்பிரமாண்டமாக
வானவேடிக்கையுடன், தப்புதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் போன்ற இஸ்லாமிய இன்னிசை கலைநிகழ்ச்சிகளுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சுற்றிவந்து, பின் நள்ளிரவு 2 மணி அளவில் தர்ஹாவை அடைந்து "செய்யது சம்சுதீன் ஷஹிது வலியுல்லா" அவர்களுக்கு சந்தனம் பூசப்பட்டு, பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அந்த விஷேசமான சந்தனம் வழங்கப்பட்டது. மேலும் இங்கு நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த சந்தனக்கூடு திருவிழா இறுதிநாளான 10-ம் நாளன்று (23.09.2024) மாலை அஸர் தெழுகை முடித்து கொடியிறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு தர்ஹாவில் சிறப்பு அன்னதானத்துடன் திருவிழா நிறைவுவடையும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.