*காட்டுப் பன்றிகள் தொல்லையால் பாதிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள்*
*காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் - விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - 38 பேர் கைது*
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி, விவசாய பயிர்களை முற்றிலுமாக நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டுப் பன்றிகள் தற்போது விவசாயிகளையும் தாக்க தொடங்கியுள்ளது. இதனால விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்திற்கு செல்வதற்கு அச்சமடைந்து உள்ளனர்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், காட்டுப்பன்றிகள் தாக்கி காயம் அடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அக்காட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் தூத்துக்குடி - மதுரை இடையிலான நெடுஞ்சாலையில் வெம்பூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 38 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது மட்டுமின்றி, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.