விளாத்திகுளத்தில் நள்ளிரவில் சாலை மறியல் : வரிசையாக அணிவகுத்து நின்ற வேன், லாரிகள்: போராட்டத்தின்போதும் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட மனிதநேயம்!திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோயில் மணி என்பவரின் மகன் அந்தோணி ராஜ்(19), என்ற இளைஞர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் இயங்கி வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் மின்கம்பங்கள் நடும் பணிக்காக வந்து குளத்தூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று(23/07/2023) மதியம் மின்கம்பங்கள் நடும் பணிக்கான உபகரணங்களை டிராக்டரில் கொண்டு செல்ல வேண்டி இருந்ததால் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர்கள் டிரைவர் இல்லாத காரணத்தினால் சரிவர டிராக்டர் ஓட்டத்தெரியாத அந்தோணி ராஜை டிராக்டரை ஓட்டிச் செல்லுமாறு நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டிரைவிங் அனுபவமும், ஓட்டுநர் உரிமமும் இல்லாத அந்தோணி ராஜ் டிராக்டரை ஓட்டிச் சென்ற போது கொல்லம்பரம்பு என்ற இடத்தில் டிராக்டர் விபத்துக்குள்ளானதில், அந்தோணி ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற குளத்தூர் காவல் நிலைய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த இளைஞர் அந்தோணி ராஜின் உறவினர்கள் அவரது உடல் மிக மோசமான நிலையில் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது... என்று கூறி அரசு மருத்துவமனை செவிலியரிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கும்படி கேட்டுள்ளனர், அதற்கு பணியில் இருந்த செவிலியர் மருத்துவமனையில் உடலை வைப்பதற்கு குளிர்சாதன வசதி கிடையாது.... வேண்டுமானால் வெளியில் இருந்து ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் உறவினர்கள் நள்ளிரவு 1 மணியளவில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு விளாத்திகுளத்தில் இருந்து மதுரை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட நேரமாக அணிவகுத்து சாலையில் நின்றன. (ஆனால், சாலை மறியலில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ஆம்புலன்சுக்கு மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுந்து வழிவிட்டு பின்னர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.)பின்னர், விளாத்திகுளம் போலீசார் போராட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் விபத்திற்கு காரணமாக அமைந்த தனியார் காற்றாலை நிறுவனத்தின் உரிமையாளர் தற்போது வரவில்லை என்றும், உரிமையாளர் வந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனவும் உயிரிழந்த அந்தோணி ராஜின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.