விளாத்திகுளம் உட்கோட்டத்தில் நள்ளிரவில் படுஜோராக நடைபெறும் ஆற்று மணல் கொள்ளை : காவல்துறையினரும் உடந்தை எனத் தகவல் : ACTION எடுப்பாரா தூத்துக்குடி எஸ்.பி.?




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் நள்ளிரவில் வைப்பாற்றிலிருந்து நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த மணல் கொள்ளைக்கு குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் காவல்துறையினரும் உடந்தையாக செயல்படுவதாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றனர். விளாத்திகுளம் உட்கோட்டத்தை பொருத்தமட்டில், விளாத்திகுளம், குளத்தூர், வைப்பார்,எட்டயபுரம்,,சங்கரலிங்கபுரம், காடல்குடி, பனையடிப்பட்டி, வேடபட்டி, அயன்பொம்மையாபுரம்,கரிசல்குளம், சிங்கிலிபட்டி, பேரிலேவன்பட்டி, வேடப்பட்டி, விருசம்பட்டி,ஆற்றங்கரை, மேட்டுப்பட்டி உட்பட பல பகுதிகளில் தினசரி மாட்டுவண்டிகள் மூலம் வைப்பாற்றில் இருந்து ஆற்று மணலை திருடி, ஒரு மாட்டு வண்டி ஆற்றுமணல் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாட்டு வண்டி மூலம் ஆற்றுமணல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பணியில் இருக்கும் இரவு காவலர்கள் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.300 வீதம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தற்போது வரை விளாத்திகுளம் சப் டிவிஷனில் நடைபெறும் இந்த மாட்டு வண்டிகள் மூலம் நடைபெற்று வரக்கூடிய மணல் கொள்ளையை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவருக்கும் இரவுப்பணி காவலர்கள் வாங்கும் லஞ்சப் பணம் செல்கிறதா? என்ற சந்தேகத்தை கிளப்புகிறது...


 (குறிப்பாக விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் மற்றும் குளத்தூர் உதவி ஆய்வாளர் முத்துராஜா போன்ற காவல்துறை அதிகாரிகள் மாட்டு வண்டி மூலம் மணல் திருடும் கும்பலிடம் தினசரி கண்டிப்பான முறையில் மணல் அடித்து தங்களுக்கு பணம் தர வேண்டும் என மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக செவிவழி தகவல்கள் கிடைக்கின்றன...)


இதில் மிகப்பெரிய அதிர்ச்சியாக குளத்தூர் பகுதியில் மாவீரன் சுந்தரலிங்கம் நகரின் அருகில் அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 

பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கும் கூட இதுபோன்று மாட்டு வண்டிகள் மூலம் ஆற்று மணல் திருடப்பட்டு அங்கு மணல் கொட்டப்பட்டு வரும் காட்சிகளும், விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் திருட்டு சம்பந்தமாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தி குழுவிடம் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் ஒருவர் தாமாகவே வந்து (பள்ளியில் ஆசிரியர் வருகை பதிவேடு எடுக்கும் போது மாணவர்கள் சொல்வதைப்போல) "சார் நான் தான் குமரேசன்.. இன்னைக்கு மீனாட்சி நகருக்குதான் என்று கூறியதோடு நான் மட்டும் தான் வந்து இருக்கேன்" இன்று தாமாக முன்வந்து ஆற்றுமணல் திருட்டுக்கு காவல்துறையினரும் உடந்த என்பதை உறுதி செய்யும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....


இவ்வாறு மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடும் கும்பல் காவல்துறையினருக்கு தான் பணம் கொடுத்து விட்டோமே... யார் வந்து கேட்பார்கள்? என்ற தைரியத்தில்... குளத்தூர் ECR ரோடு, விளாத்திகுளம் எட்டயபுரம் ரோடு போன்ற பிரதான சாலைகளிலும் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் இருப்பதைக் கூட பொருப்படுத்தாமல் எந்தவித சிறு தயக்கங்களும் இன்றி சர்வ சாதாரணமாக ஏராளமான மாட்டு வண்டிகளில் ஆற்று மணலை கொண்டு செல்லும் காட்சிகளும் காணப்படுகின்றன. எனவே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விளாத்திகுளம் காவலர் கூட்டத்தில் அதிக அளவில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க உடனடியாக மாட்டு வண்டிகள் மூலமாக திரட்டியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு இந்த மணல் திருட்டுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரின் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது....