விளாத்திகுளம் அருகே இளைஞரை சக நண்பர்கள் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு : காவல்துறையினர் மறுப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் என்பவரின் மகன் பரமசிவன் (28), இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி (27) மற்றும் ஜெயராமன்(25) ஆகியோர் இருவருடன் சேர்ந்து 22-07-2025 செவ்வாய்க்கிழமை மதியம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு ஆற்றங்கரை வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு குளிக்கும்போது பரமசிவன் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால் உடனே முரளி மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் சேர்ந்து பரமசிவத்தை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் பரமசிவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவல்அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பரமசிவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற முதியவர் ஜெயராமன் மற்றும் முரளி ஆகியோர் இருவரும் சேர்ந்துதான் பரமசிவத்தை அடித்துக் கொன்று தண்ணீரில் போட்டதாகவும், உடனே கருப்பசாமி பரமசிவத்தின் பெற்றோரை கூப்பிட்டு வருவதற்கு முன்பாக, பரமசிவத்தை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தபோது நேரில் பார்த்ததாக கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையிடம் கேட்ட போது பரமசிவத்தின் உடலில் எந்த காயமும் இல்லை,அவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை, பரமசிவத்தின் உடற்கூற்ஆய்வு அறிக்கை நெல்லை - பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலிருந்து 15 நாட்களுக்குப்பின்பு தான் வரும்,உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பின்பு தான் இந்த வழக்கு சம்பந்தமாக எங்களால் முழுமையாக கூற முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.