"எவன் செத்தாலும் தாலுகா ஆபிஸ்ல-தான் புதைப்போம்.." - விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகர் பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையை ஆக்கிரமித்திருப்பதாகவும், இதனால் அங்குள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி, பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பட்டா உட்பிரிவை கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் அந்த பொதுப்பாதையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் இப்பாதையானது பட்டா நிலத்தில் வருவதால் என்னால் சட்டத்திற்குட்பட்டு எதுவும் செய்யமுடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் பொது மக்களிடம் நாளைய தினம் உரிய விசாரணை மேற்கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மீது தவறு இருக்கும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளதாகக்கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தராதபட்டசத்தில், "சிதம்பரநகரில் எவன் செத்தாலும் தாலுகா ஆபிஸ்ல-தான் புதைப்போம்" என ஆக்ரோஷமாக தெரிவித்துச் சென்றனர்.