விளாத்திகுளம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் புரோட்டா மாஸ்டர் கொடூரமாக குத்திக்கொலை : 24 வயது இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜெப தர்மராஜ் என்பவரின் மகன் கண்ணன் (எ) விஜி கரண்(46) எப்போதும் வென்றான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே ஹோட்டலுக்கு வேலைக்கு வந்த காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிய செல்வி(29) என்ற திருமணமான பெண்ணுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். மேலும் முனிய செல்விக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் மாதவன் என்ற 24 வயது இளைஞருக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. முனிய செல்வி, புரோட்டா மாஸ்டரான கண்ணனுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த மாதவன் பலமுறை முனியசெல்வியிடம் பிரச்சனை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புரோட்டா மாஸ்டரான கண்ணன் காட்டுநாயக்கன்பட்டியில் முனியசெல்வியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வாடகைக்கு வந்து தங்கியுள்ளார். ஏற்கனவே, புரோட்டா மாஸ்டர் கண்ணன் - முனிய செல்வி தொடர்பு காரணமாக இருவரின் மீதும் ஆத்திரத்தில் இருந்த மாதவனுக்கு, புரோட்டா மாஸ்டர் கண்ணன், முனிய செல்வி வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வாடகைக்கு வந்தது தெரிய வந்தததையடுத்து, நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கத்தியுடன் கண்ணனின் வீட்டிற்கு சென்ற மாதவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணனை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த முனிய செல்வி வந்து பார்த்தபோது அவரையும் மாதவன் முகம் மற்றும் கையில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் புரோட்டா மாஸ்டர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற 24 வயது இளைஞனை கைது செய்து கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.