விளாத்திகுளத்தில் 15 மணி நேரத்துக்கு மேலாக மின்தடையால் பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்றிரவு முழுவதும் பெய்த அதிகனமழையின் காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் எட்டையபுரம் சாலையில் இருந்த பெரிய மரம் முறிந்து மின் ஒயர்களில் விழுந்ததில் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது, இந்த 2 மின்கம்பங்கள் விழுந்ததன் காரணமாக விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பங்களா தெரு, வாட்டர் டேங் ரோடு, எம்ஜிஆர் நகர், எட்டையாபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளாத்திகுளம் மின்வாரிய ஊழியர்கள் காலையில் இருந்து சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் நட்டு பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், தற்போது வரை மின்கம்பங்கள் நடும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால், தற்போது வரை கிட்டத்தட்ட 15 மணி நேரம் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது குழந்தைகளுடன் மின்சாரம் இன்றி மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், கார்த்திகை தீபத்திருநாளான இன்று விளாத்திகுளம் மின்வாரியத்தின் அதீத மெத்தனம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக தூத்துக்குடி மின் மேற்பார்வையாளர் விளாத்திகுளம் மின்வாரிய அலுவலத்திற்கு போதுமான பணியாளர்களை நியமித்து உடனடியாக மின் பழுதுகளை நீக்கி இப்பகுதி மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.