விளாத்திகுளத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர் திருவிழா - விவசாய பாரம்பரியத்தை போற்றிய விழா!
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1ஆம் நாளை முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அனைத்து ஏர் உழவன் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பொன் ஏர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விவசாயம் தமிழர் வாழ்க்கையின் முதுகெலும்பு என்பதை வலியுறுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, இம்முறையும் விவசாயிகளின் உற்சாக பங்கேற்புடன் நடைபெற்றது. விழாவையொட்டி ஏர் (காளை ஏர்) உழவு கருவிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அணிவகுப்பாக கொண்டு வரப்பட்டன. விவசாயிகள் பாரம்பரிய உடை அணிந்து, மண்ணுக்கும் உழவுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஏர் உழவன் சங்கத் தலைவர் இராஜேஷ் உழவர், தெற்கு மண்டல அமைப்பாளர் கார்மேகம், விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் காளிமுத்து ராஜ், கமலாபுரம் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பூமி, தங்கராசு, விளாத்திகுளம் காளி, கௌதம், குட்டி, சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொன் ஏர் திருவிழா விவசாயத்தின் பெருமையை எடுத்துரைக்கும் விழாவாகவும்,பாரம்பரிய ஏர் உழவு முறையின் முக்கியத்துவம், இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் நிலத்தையும் நீர்வளத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.